போராட்ட தேதிகளை அறிவித்தது ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு
போராட்ட தேதிகளை அறிவித்தது ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு
UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:15 AM
சென்னை:
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.கூட்டமைப்பு கூட்டம், சென்னையில் நேற்று, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பகுதிநேர பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், போராட்ட ஆயத்த கூட்டங்கள்; வரும், 30ம் தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; பிப்., 15ல், சென்னையில் உண்ணாவிரதம்; பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவானது.