UPDATED : ஜன 24, 2024 12:00 AM
ADDED : ஜன 24, 2024 10:10 AM
புதுடில்லி:
பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது பெற்ற சிறுவர் - சிறுமியரிடம், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.கலை, கலாசாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வி, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும், 5-18 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும், பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் என்ற விருது வழங்கி வருகிறது.நாடு முழுவதுமிருந்து, 10 சிறுமியர், ஒன்பது சிறுவர்கள் என, மொத்தம், 19 பேர் இந்த விருதுக்கு இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.இந்நிலையில் விருது பெற்ற சிறுவர் - சிறுமியருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்கள் அனைவருக்கும், பிரதமர் மோடி நினைவுப்பரிசு வழங்கினார். தொடர்ந்து, இசை, கலாசாரம், சூரிய சக்தி, பூப்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து, சிறுவர் - சிறுமியரிடம் பிரதமர் மோடி உரையாடினார்.மேலும் அவர்களுடன், இசையின் மீதான தன் ஆர்வத்தையும், தியானத்தில் அது எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.