சட்டக்கல்லுாரி புது கட்டடம் திறப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டக்கல்லுாரி புது கட்டடம் திறப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:18 AM
மதுரை:
மதுரை அரசு சட்டக் கல்லுாரி புது கட்டடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி சூர்ய பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறேன். இது 1974 ல் துவக்கப்பட்டது. கட்டடம் பழுதடைந்தது. புது கட்டடம் அமைக்க ரூ.40 கோடியே 8 லட்சத்து 81 ஆயிரத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. கட்டுமானப் பணி 2021 டிச.,10ல் துவங்கி 2023 டிச.,11ல் நிறைவடைந்தது. இதை பயன்பாட்டிற்கு கொண்டுவராததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக சட்டத்துறை செயலர், அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளருக்கு மனு அனுப்பினோம். புது கட்டடத்தை திறக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு:
கல்லுாரிக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்ய அரசுக்கு திட்ட அறிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் புது கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள், புது கட்டடத்தை இயன்றவரை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

