UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:48 AM
விருதுநகர்:
விருதுநகரில் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரசார பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதை கண்காணிப்பது அவசியமாகி உள்ளது.
தேர்தல் நடத்தை விதியில் பிரசார பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது முக்கியமான விதி. இதை பல அரசியல் கட்சியினர் பின்பற்றினாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிமட்ட பொறுப்பில் இருக்கும் தொண்டர்கள் நோட்டீஸ் வினியோகிக்க சோம்பேறிப்பட்டு தங்கள் வீட்டு பிள்ளைகள், சிறுவர்களை பயன்படுத்தி தெருக்களில் நோட்டீஸ் வினியோகிப்பதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதே போல் அவர்களது கைகளில் கொடிகளை கொடுத்து கூட்டமாக பிரசாரத்திற்கு அழைத்து செல்லவும் வாய்ப்புள்ளது. இது போன்ற சூழல்களில் கட்சியினரிடையே வன்முறை உள்ளிட்ட தாக்குதல் பிரச்னைகள் ஏற்பட்டால் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விடுமுறை என்பதாலும், சிறிது பணம் கிடைப்பதாலும் சிறுவர்களும் தயங்காமல் இந்த பணியில் ஈடுபடும் சூழல் உள்ளது. மாவட்ட தேர்தல் நிர்வாகம் இதை கண்காணித்து தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினரை முடுக்கி விட வேண்டும்.