UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:59 AM
சென்னை:
ஐ.ஏ.எஸ்., பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில், சென்னையை சேர்ந்த டாக்டர் பிரசாந்த், தமிழக அளவில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் என்ற இந்திய குடிமை பணிகளில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளில், 1,105 காலியிடங்களை நிரப்ப, முதல்நிலை தகுதி தேர்வு, கடந்த ஆண்டு மே, 28ல் நடந்தது.
நேர்முக தேர்வு
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, செப்., 15 முதல், 24 வரை பிரதான தேர்வு நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜனவரி முதல் கடந்த வாரம் வரையிலும், படிப்படியாக நேர்முகத் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த டாக்டர் எஸ்.பிரசாந்த், அகில இந்திய அளவில், 78வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே, 2016 - 20ல் சென்னை மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்து, 40 தங்க பதக்கங்களை இவர் பெற்றுள்ளார். மருத்துவ படிப்பை முடித்ததும் பிரசாந்த், எட்டு மாதங்களில் பயிற்சி பெற்று, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, முதல் முயற்சியிலேயே சாதனை படைத்துள்ளார்.
தன் வெற்றி குறித்து, டாக்டர் பிரசாந்த் கூறியதாவது:
சிறு வயதில் தந்தையை இழந்த நான், தாய் சாந்தி மற்றும் பாட்டி ஜெயலட்சுமியின் ஆதரவில், மருத்துவ படிப்பை முடித்தேன். அப்போதே, சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். முதல் முயற்சியிலேயே, தமிழக அளவில் முக்கிய இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு மருத்துவ ஆணையத்தில் இளம் மருத்துவர்களுக்கான தலைவராக உள்ளேன். தொடர்ந்து, என்னை போல் சிவில் சர்வீசஸ் கனவில் உள்ள மாணவர்களுக்கு, இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதி தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, மனிதநேயம் பயிற்சி மையம் சார்பில், கட்டணமின்றி இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் அரசு அதிகாரிகள், உளவியல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் வழியே, மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. நேர்முக தேர்வுக்கு டில்லி சென்றுவர, விமான டிக்கெட் மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மனிதநேயம் பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 79 பேரில், 11 மாணவியர் உள்பட, 28 பேர் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் சென்னையை சேர்ந்த டாக்டர் எஸ்.பிரசாந்த் அகில இந்திய அளவில், 78ம் இடம் பெற்றுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த சுபதர்ஷினி, 83ம் இடம் பெற்றுள்ளார். அவர்களுக்கு மனிதநேயம் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் பிரசாந்த் இரண்டு மையங்களிலும் பயிற்சி பெற்றுள்ள நிலையில், மனிதநேயம் பயிற்சி மையத்தின் நிறுவனர் சைதை துரைசாமி மற்றும் ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் இஸ்ரேல் ஜெபசிங் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர்.