UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 09:51 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை வளாகத்திற்குள் மர்ம நபர்கள் அடிக்கடி நுழைந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் குமார் ராஜினமா செய்து ஒரு வாரமாகிறது. துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலையை வழிநடத்த கன்வீனர் கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. பதிவாளர் உட்பட அனைத்து உயர் பதவிகளையும் பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.
இவ்வளாகத்தில் 78 துறைகள், 21 புலங்கள், உயர் ஆய்வுக் கூடங்கள், ஹைடெக் நுாலகம், விடைத்தாள் திருத்தும் பிரிவு, பாடப்புத்தகங்கள் வைப்பறை என பல்வேறு முக்கிய பிரிவுகள் உள்ளன. சுழற்சி முறையில் காலை 12, இரவு 12 செக்யூரிட்டிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் வளாகத்தில் குடிநீர் குழாய் வால்வுகள், கார், யு.பி.எஸ்., பேட்டரிகள், கம்ப்யூட்டர்கள் உபகரணங்கள் உள்ளிட்டவை அடிக்கடி திருடு போவதாக சர்ச்சைகள் எழுகின்றன. ஆனால் புகார்களோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை. திருட்டுகளில் பல்கலை ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதால் பெரும்பாலான சம்பவங்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை மர்ம நபர் ஒருவர் பல்கலையில் இருந்து வெளியேறுவதை அங்குள்ள செக்யூரிட்டி ஹரி என்பவர் பார்த்து, ஆறுமுகம் என்ற செக்யூரிட்டியிடம் தெரிவித்தார். அந்த நபரை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து விசாரித்தபோது 2 பேட்டரிகளை திருடியிருந்தது தெரிந்தது. பல்கலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பல்கலை அலுவலர்கள் கூறியதாவது:
மெயின் நுழைவு வாயிலை தவிர பல்கலைக்குள் நுழையும் பல வழிகள் பாதுகாப்பற்றதாக உள்ளன. இதனால் பலர் தாராளமாக உள்ளே வந்து செல்கின்றனர்.
ஏற்கனவே பல முறை விடைத்தாள் திருட்டு, விடுதிகளுக்கு உட்பட்ட குடிநீர் குழாய்களில் செம்பு வால்வுகள் மாயமாவது, இரும்பு, மர உபகரணங்கள் மாயம் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை எவ்வித புகாரும் செய்யப்படவில்லை. பல்கலை ஊழியர்கள் சிலருக்கு திருட்டில் தொடர்பு இருப்பதால் வளாகத்திற்குள்ளேயே 'பஞ்சாயத்து' நடக்கிறது.
போலீஸ் வரை புகார்கள் செல்வதில்லை. நேற்று கையும் களவுமாக சிக்கிய நபரை செக்யூரிட்டிகள் பிடித்தபோதும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை. கடும் நடவடிக்கை எடுத்தால் தான் பல்கலை சொத்துக்களை பாதுகாக்க முடியும். உயர்கல்வி செயலாளர் இவ்விஷயத்தில் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றனர்.