பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கி, தொப்பிக்கு தடா
பட்டமளிப்பு விழாவில் கருப்பு அங்கி, தொப்பிக்கு தடா
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:59 PM

புதுடில்லி:
மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணிய தேவையில்லை; நம் நாட்டின் பாரம்பரிய உடையை அணியலாம் என, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணிந்து, மாணவர்கள் பட்டங்கள் பெறுவது வழக்கம்.
இந்நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழாக்களில், மாணவர்கள் அணியும் உடையில் மாற்றம் கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பெரும்பாலான கல்லுாரிகளில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் தற்போது கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணியும் நடைமுறை உள்ளது. இந்த உடை அணிவது, ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய கலாசாரமாகும். இது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளில் அறிமுகப்படுத்தியது. இந்த நடைமுறையை மாற்றும் தருணம் வந்துவிட்டது.
எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில் இனி கருப்பு நிற அங்கி, தொப்பி அணிவதற்கு பதிலாக, நம் நாட்டின் பாரம்பரிய உடைகளை அணியலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.