பள்ளிகளில் மொழிகள்; போர்ட்டல் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுரை
பள்ளிகளில் மொழிகள்; போர்ட்டல் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுரை
UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 30, 2024 10:38 AM
பொள்ளாச்சி:
அரசுப்பள்ளிகளில், உயர்தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் வாயிலாக, மாணவர்களின் மொழிகள் போர்ட்டல் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், உயர்தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் வாயிலாக, மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்கப்படுகிறது.
குறிப்பாக, மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மதிப்பீட்டுப் பணி, உயர்கல்வி வேலைவாய்ப்பு, ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வகையில், வாரந்தோறும், ஒரு நாளில், மொழிகள் போர்ட்டலை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால், கடந்த இரு மாதங்களில் மொழிகள் போர்ட்டல் பயன்பாடு குறித்த கணக்கீடு, பல பள்ளிகளில் 10 புள்ளிகளுக்கும் குறைவாகவே இருந்துள்ளது. இதனால், மொழிகள் போர்ட்டல் பயன்பாட்டை அதிகரிக்கச்செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உயர்தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் கொண்ட அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் மொழிகள் போர்ட்டல் பயன்பாடு குறைந்த சதவீதத்தில் உள்ளது. இதனால், பள்ளிகள்தோறும், அனைத்து மாணவர்களால் மொழிகள் போர்ட்டல் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாணவர்கள் தங்களின் எமிஸ் ஐ.டி வழியாக மொழிகள் போர்ட்டலுக்குள் சென்று கற்றலில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு கூறினர்.