மலேஷியாவுக்கு சித்தா மருந்து ஏற்றுமதி செய்ய முடிவு
மலேஷியாவுக்கு சித்தா மருந்து ஏற்றுமதி செய்ய முடிவு
UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 08:47 PM

சென்னை:
மலேஷியாவில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் துவங்குவது தொடர்பாக, இம்ப்காப்ஸ் நிறுவனத்துடன், அந்நாட்டு அமைச்சர் குலசேகரன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் வந்துள்ள மலேஷிய நாட்டின் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் எம்.குலசேகரன், கல்வி நிலையங்களை பார்வையிட்டு வருகிறார்.
அத்துடன், இந்திய மருத்துவ முறை சிகிச்சையை அறிந்து கொள்ளவும், மலேஷிய மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கவும், திருவான்மியூரில் உள்ள, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும், மருந்து தயாரிப்பு தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன் கூறியதாவது:
மத்திய அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், பன்மாநில கூட்டுறவு நிறுவனமாக இம்ப்காப்ஸ் உள்ளது. இங்கு, 1,200 வகையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதில், 17,500 அரசு பதிவு பெற்ற டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மலேஷியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்குவது குறித்து, அந்நாட்டு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினோம்.
இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், துணை உணவு பொருட்கள், துணை சுகாதார மருந்துகள், மலேஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்நாட்டினர், இம்ப்காப்சில் சிகிச்சை பெறவும், தேவைப்பட்டால் நம் டாக்டர்கள் அங்கு சென்று பயிற்சி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.