கூடுதல் இன்ஜி., கவுன்சிலிங் நடத்த வலுக்கிறது கோரிக்கை
கூடுதல் இன்ஜி., கவுன்சிலிங் நடத்த வலுக்கிறது கோரிக்கை
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:00 AM
கோவை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 72 சதவீத இடங்களே பூர்த்தியாகி உள்ள நிலையில், இன்னொரு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 440க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.
மொத்தம், 1.60 லட்சம் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஜூலை, 22ம் தேதி முதல், 26 ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.
அதன் பின், பொதுக்கலந்தாய்வு, ஜூலை 28ம் தேதி முதல், ஆக., 6 வரை நடந்தது. பல்வேறு சுற்றுகளாக நடந்த கவுன்சிலிங், செப்., 3ம் தேதியுடன் நிறைவடைந்தது. நடப்பாண்டில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், இரண்டாம் சுற்று மருத்துவ கவுன்சிலிங் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாணவர்களுக்கு, மருத்துவ இடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இன்ஜினியரிங்கில் காலி இடங்களின் எண்ணிக்கை, அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, மருத்துவக் கவுன்சிலிங் நிறைவடைந்த பின், இன்ஜினியரிங் கவுன்சில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கல்வியாளர்கள் கூறுகையில், மருத்துவ கவுன்சிலிங்கில் ஒரு சில மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவ படிப்புகளுக்கு செல்ல நேரிடும்.
அப்போது அக்கல்லுாரிகளில் இடம் காலியாக இருக்கும். அந்த இடங்களையும் சேர்த்து, கவுன்சிலிங் நடத்தும் போது, அந்த கல்லுாரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு மேலும், ஒரு கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்றனர்.