இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: சலுகையை நீட்டித்தது தாய்லாந்து
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: சலுகையை நீட்டித்தது தாய்லாந்து
UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 02:56 PM
புதுடில்லி:
தாய்லாந்திற்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிப்பதற்கான காலத்தை, அந்த நாட்டு அரசு, காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் ஏழு கோடி மக்கள் தொகையில், ஒரு கோடி பேர் சுற்றுலாவால் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கொரோனா தொற்றுக்குபின் அந்நாட்டில் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.
உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுலா மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இதை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள அந்த நாட்டு அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பரில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை என்றும், அவ்வாறு வரும் நபர்கள், 30 நாட்கள் வரை விசா இன்றி தங்கள் நாட்டில் தங்கி இருக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்த நடைமுறை முதலில் கடந்த மே 10ம் தேதி வரை அமலில் இருக்கும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை குறிப்பிட்டிருந்தது. அதன்பின், நவம்பர் 11ம் தேதி வரை இந்த நடைமுறையை நீட்டித்தது. இதன் வாயிலாக தாய்லாந்திற்கு செல்லும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்நிலையில், விசா இன்றி தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு எவ்வித காலக்கெடுவும் இல்லை என தாய்லாந்து சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வரை தாய்லாந்திற்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 16.4 லட்சத்தை தொட்டுள்ளது. நடப்பாண்டில், இந்த எண்ணிக்கை, 20 லட்சத்தை எட்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.