அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்
அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்
UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 02:57 PM
ஓசூர்:
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனேகொள்ளு பஞ்.,க்கு உட்பட்ட டி.புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 33 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, சமூக வலைதள பக்கத்தில் எங்கள் பள்ளி மாணவ, மாணவியர் தமிழ், ஆங்கில மொழிகளை நன்றாக வாசிக்க தெரிந்தவர்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மகேஷ், அழைப்புக்கு நன்றி. விரைவில் வருகிறேன் என, பதிவிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் காலை, டி.புதுார் அரசு துவக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, மாணவ, மாணவியரின் கற்றல், கற்பித்தல் குறித்து ஆய்வு செய்தார். அதேபோல், கும்மளாபுரம் அரசு உயர்நிலைபபள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
பின், அமைச்சர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகளில், 229 தொகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன். 2022 அக்டோபரில் துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வு பணியாகும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பள்ளிகளின் நிலை என்ன. கட்டடங்கள் எவ்வளவு தேவைப்படுகிறது என முதல்வர் கேட்டறிந்து வருகிறார். வரும் 8 ல் பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தை தமிழக முதல்வர் நடத்துகிறார்.
டி.புதுார் அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, பள்ளிக்கு வருமாறு சேலஞ்ச் விடுத்துள்ளார். அதேபோல் அனைத்து நிலையிலும் உள்ள தலைமையாசிரியர்களும் அழைப்பு விட வேண்டும். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்.
இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு, 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொல்லபோனால் நமக்கு தான் தனி பட்ஜெட் என்ற அளவுக்கு, நிதி ஒதுக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 7,000 க்கும் மேற்பட்ட கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வரும், 8க்குள் பள்ளி வகுப்பறை கட்டடங்களை முதல்வர் திறக்க உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், 1.5 சதவீதம் வரை தேர்ச்சி விகித உயர்வை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில் காண முடிகிறது.
இவ்வாறு கூறினார்.