போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு குழுக்களுக்கு பரிசு
போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு குழுக்களுக்கு பரிசு
UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 10:45 AM

சென்னை:
போதை இல்லா தமிழகம் என்ற இலக்குடன், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு குழுக்களில், சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு, பரிசுகள் வழங்க, 2.55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும், 'போதை இல்லா தமிழகம்' என்ற இலக்கை எட்டவும், போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், போதைக்கு எதிரான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இக்குழுவினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். அத்துடன், இக்குழுவினரின் செயல்பாடுகளை கண்காணிக்க, மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், போலீஸ் எஸ்.பி., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான குழுவில், போதை பொருள் தடுப்பு மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை கமிஷனர்கள், நாட்டு நலப்பணித்திட்ட துணை இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு, பரிசாக முறையே 15,000, 10,000, 5,000 ரூபாய் வழங்கப்படும். மாநில அளவில் முறையே 1 லட்சம், 75,000 மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, 2.55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.