பெண் கல்வியை ஊக்கப்படுத்துங்கள்: விழிப்புணர்வு சொற்பொழிவில் அறிவுறுத்தல்
பெண் கல்வியை ஊக்கப்படுத்துங்கள்: விழிப்புணர்வு சொற்பொழிவில் அறிவுறுத்தல்
UPDATED : நவ 29, 2024 12:00 AM
ADDED : நவ 29, 2024 08:13 AM
சூலுார்:
நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும், என, விழிப்புணர்வு சொற்பொழிவில், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் மெய் ஸ்ரீ பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், நமது தேசம்; புண்ணிய தேசம் எனும் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மெய் ஸ்ரீ, யாதுமாகி நின்றாள் என்ற தலைப்பில் பேசியதாவது:
தொன்று தொட்டு பாரத தேசத்தில் தான் பெண்மை போற்றப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இது கிடையாது. தாய்மை என்பது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உண்டு. தாய்மையில் அன்பு, வீரம், திறமை, கடின உழைப்பு அடங்கியுள்ளது. பெண்கள் சக்தி மேலானது.
பெண்கள் உயர்வடைந்தால் அந்த சமுதாயம் உயர்வடையும். அதற்கு கல்வி முக்கியம். கல்வி ஒவ்வொரு பெண்ணையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது.
நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, படித்ததால் படிப்படியாக முன்னேறி, உயர்ந்த பதவியில் உள்ளார். அதேபோல் நன்கு படித்த பெண்கள் பலர், தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.
அதேநேரத்தில் படிக்க ஏங்கும் பெண்களும் இருக்கின்றனர். ஏற்ற தாழ்வுகளும் உள்ளன. அதில் மாற்றம் ஏற்படுத்திட, பெண்களுக்கு பாரபட்சமின்றி கல்வி கொடுக்க வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். உலகிலேயே அறம் சார்ந்து வாழும் பெண்கள் நமது நாட்டில் தான் அதிகம் உள்ளனர். பாரதியாரின் மனதில் எழுச்சியை உண்டாக்கிய சகோதரி நிவேதிதா போல் ஏராளமானோர் நம் நாட்டில் உள்ளனர். அதனால், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.