UPDATED : டிச 14, 2024 12:00 AM
ADDED : டிச 14, 2024 11:30 AM
வால்பாறை:
அரசு கல்லுாரி நுழைவுவாயில் ஆட்டோ ஸ்டாண்டாக மாறியதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரின் மத்தியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது.
இந்த கல்லுாரியில், 937 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், கல்லுாரி நுழைவுவாயிலின் முன்பக்கம் விதிமுறையை மீறி ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கல்லுாரிக்கு மாணவர்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
வால்பாறை அரசு கல்லுாரி நுழைவுவாயிலின் முன்பாக எந்த வாகனங்களும் நிறுத்தக்கூடாது என, பல முறை தெரிவித்துள்ளோம். ஆனாலும், தொடர்ந்து கல்லுாரி வாசலில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். அரசு கல்லுாரி வளாகத்தின் முன்பாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இங்கும் அப்படித்தான்!
வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முன்பாக, காலை முதல் மாலை வரை விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போஸ்ட் ஆபீஸ் செல்லும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதே போல், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயிலை மறைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பள்ளிக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு, நாள் தோறும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசாரும் கண்டு கொள்வதில்லை.