UPDATED : டிச 25, 2024 12:00 AM
ADDED : டிச 25, 2024 05:44 PM

சென்னை:
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை இரு மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்கலை வளாகத்தில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மாணவியின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலையின் பதிவாளர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தி வந்த போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.