UPDATED : ஏப் 14, 2025 12:00 AM
ADDED : ஏப் 14, 2025 10:29 AM

திருப்பூர்:
பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகளை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 15ம் தேதியுடன் முடிகிறது.
தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வரும், 17 ம் தேதிக்கும் துவக்கப்பள்ளி தேர்வுகளை முடித்து விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி தேர்வுகளும் முன்கூட்டியே துவங்கி நடந்து வருகிறது.
நடப்பு கல்வியாண்டு நிறைவடைய, இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், 2025 - 2026 ம் கல்வியாண்டுக்கான பாடநுால் வினியோகத்துக்கு பாடநுால் கழகம் முன்கூட்டியே தயாராகி விட்டது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநுால் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் மாநிலம் முழுதும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு மையத்துக்கு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் கூறுகையில், அனைத்து பிரிவுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முன்கூட்டியே முடிந்து விட்டது. நடப்பாண்டு (2025 - 26) வழங்கப்பட உள்ள பாடப்புத்தகம், பாடங்களில் மாற்றமில்லை.
தயாராக உள்ள எட்டாம் வகுப்பு புதிய பாடப்புத்தகம் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரத்துக்குள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கான புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
ஜூன் முதல் வாரம் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்படும், என்றனர்.