UPDATED : ஏப் 14, 2025 12:00 AM
ADDED : ஏப் 14, 2025 10:28 AM

திருப்பூர்:
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் மருத்துவர் படிப்பில் நுழையும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
துவக்கம் முதலே, நீட் தேர்வுக்கு எதிரான நிலைபாடை, தி.மு.க., எடுத்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வரும் தி.மு.க., அரசு, தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையிலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்தது. இதுதொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக்கூட்டமும் நடத்தியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும், நீட் தேர்வில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நீட் பயிற்சி பெற ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. சேலம், திருப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில், நீட் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிகளவில் நீட் தேர்வெழுதுவோர் எண்ணிக்கையில், மாநில அளவில் இம்மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன.
கல்வித்துறையினர் கூறுகையில், மாணவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது என்றனர்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு மருத்துவ படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.