விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
UPDATED : நவ 11, 2025 11:03 AM
ADDED : நவ 11, 2025 11:10 AM

திருப்பரங்குன்றம்:
''தமிழகத்தில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் பணி துவங்க உள்ளது,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி கல்லுாரி கட்டடங்கள் சேத மடைந்துள்ளதால், திருப்பரங்குன்றம் வட்டாரம் கோ.புதுப்பட்டியில், 70 கோடி ரூபாயில் புதிதாக கல்லுாரி கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராதாமணி வரவேற்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் ஒரே அரசு ஹோமியோபதி கல்லுாரி திருமங்கலத்தில் இருப்பதுதான். இக்கல்லுாரிக்கு புதிதாக, 5.11 ஏக்கரில் ஐந்து மாடி கட்டடங்கள், மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனி தங்கும் விடுதிகள், 50 படுக்கைகளுடன் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை ஒட்டி அமைய உள்ள இக்கட்டடம், மதுரைக்கு சிறப்பு.
எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனையாக உருவாகி கொண்டிருக்கிறது. அதை ஒட்டி கட்டப்படவுள்ள இந்த அரசு ஹோமியோபதி கல்லுாரியும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும். தமிழகத்தில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் பணி துவங்க உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் படித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் படிப்பை முடிப்பதற்குள், இந்த எய்ம்ஸ் மருத்துவமனை வகுப்பறைகளையாவது பார்த்து செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

