UPDATED : டிச 13, 2025 09:22 AM
ADDED : டிச 13, 2025 09:23 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில், பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.
பந்தலுார் அருகே குன்றில்கடவு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி 29. பி.எஸ்.சி., தாவரவியல் பட்டதாரி இளைஞரான இவர், படித்து முடித்ததும் வேலை தேடுவதற்கு பதில், பிதர்காடு பகுதியில் தனது தந்தை மேற்கொண்டுள்ள விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்ட, திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று, 26 நாட்கள் பயிற்சி பெற்று இயற்கை சாகுபடியளராக மாறினார். தனது தேயிலை, குறுமிளகு, காபி தோட்டத்தை முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார்.
தொடர்ந்து, பஞ்சகாவ்யம், தசகாவியம், மீன் அமிலம், ஜீவாமிர்தம் மற்றும் உயிர் உரங்களையும் பயன்படுத்தி, பூச்சிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தினார்.
இவரின் தோட்டத்தை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயலட்சுமி நேரில் ஆய்வு செய்த பின் கூறுகையில், ''பட்டதாரி இளைஞரான பார்த்தசாரதி, முறையான பயிற்சி பெற்று இயற்கை விவசாயத்துக்கு மாறி உள்ளார். இளையோர் வேலை தேடி அலைவதை விட, விவசாயத்தில் நாட்டம் செலுத்தினால் வருவாய் மட்டும் இன்றி மனதிற்கும் நிம்மதி ஏற்படும்,'' என்றார்.

