UPDATED : டிச 13, 2025 09:22 AM
ADDED : டிச 13, 2025 09:22 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் அடுத்த கண்டிபுதுார் பகுதியில் உள்ள, நகராட்சி துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, கண்டிபுதுார் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளியில் மூன்று கூடுதல் வகுப்பறைகள் ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டு வருவதால், தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என, ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,இதையடுத்து, கட்டப்பட்ட வகுப்பறையின் தரத்தை, மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில், ஆய்வு செய்து, மூன்று வாரத்திற்குள் அறிக்கை வழங்க வேண்டும் என, நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடங்களின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனர் தயாளன் கூறகையில்,'' கண்டி புதுார் அரசு துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும், வகுப்பறை கட்டடங்களின் தரத்தை நேற்று துறை சார்ந்த அதிகாரிகள் தான் ஆய்வு செய்தனர். இந்த தரம் ஆய்வு என்பது துறை சார்ந்த வழக்கமான ஆய்வு பணி தான். நீதிமன்றம் உத்தரவின்படி தரம் குறித்து ஆய்வு செய்ய, ஓரிரு நாளில் அதிகாரிகள் வருவர்,'' என்றார்.

