சென்னை பல்கலை மாணவர்களின் ஆய்வறிக்கைக்கு ஐ.ஐ.டி., விருது
சென்னை பல்கலை மாணவர்களின் ஆய்வறிக்கைக்கு ஐ.ஐ.டி., விருது
UPDATED : டிச 12, 2025 10:21 AM
ADDED : டிச 12, 2025 10:24 AM

சென்னை:
சென்னை பல்கலை பிஎச்.டி ., மாணவர்களின் ஆய்வறிக்கைக்கு, ரோபர் ஐ.ஐ.டி., விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய உயிரி பொருட்கள் மற்றும் செயற்கை உடலுறுப்புகள் சங்கம் சார்பில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோபர் ஐ.ஐ.டி.,யில், உயிரி பொருட்கள், மருத்துவ சாதனங்கள், 3டி பிரிண்டிங், திசு இன்ஜினியரிங், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 40வது சர்வதேச கருத்தரங்கு, சமீபத்தில் நடந்தது.
இந்த கருத்தரங்கில், சென்னை பல்கலை தேசிய நுண்ணறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த இலக்கியா, ஷாலினி தாமஸ் ஆகிய பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கைக்கு விருது வழங்கப்பட்டது.
சென்னை பல்கலை ஆராய்ச்சி திட்ட இயக்குநர் பேராசிரியர் பாலகுமார் வழிகாட்டுதலின்படி, எலும்பு திசு சிகிச்சை, ரத்த நிலையாக்கம் ஆகிய துறைகளில், மருத்துவ பயன்பாட்டுக்கான உயிரியல் பொருட்கள் மற்றும் மருத்துவ தயாரிப்புகள் மையமாக வைத்து, இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசின் முதல்வர் ஆராய்ச்சி நிதியின் கீழ் இருவரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சர்வதேச கருத்தரங்கில், சென்னை பல்கலை ஆய்வறிக்கைக்கு, ஒரே ஆண்டில், இரண்டு விருதுகள் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என, பேராசிரியர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

