கணிதம், அறிவியல் அறிவுத்திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
கணிதம், அறிவியல் அறிவுத்திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : ஜன 29, 2026 01:34 PM
ADDED : ஜன 29, 2026 01:35 PM
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை இந்திய அணுசக்தி துறையின் தனித்துவமான கணித, அறிவியல் நிறுவனம் சார்பில், கணித மற்றும் அறிவியல் அறிவுத்திறனை பள்ளிகளில் மேம்படுத்துவதற்காக, 'விஞ்ஞான் பிரதீபா' என்ற மூன்று நாள் பயிற்சி முகாம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., தொழில் நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது.
ஒருங்கிணைப்பாளர் பானுமதி வரவேற்றார். சென்னை, கணித அறிவியில் நிறுவன கருத்தாளர் மணிகண்டன், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன கருத்தாளர் சதீஷ்குமார் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
'விஞ்ஞான் பிரதீபா' பயிற்சியானது, ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களிடத்தில் அறிவியல் சிந்தனையை உருவாக்கவும், கணிதம் மற்றும் அறிவியலில் கருதுகோள்களை வடிவமைத்து செலவில்லாமல் பரிசோதனைகளை செய்ய துாண்டும். மேலும், பள்ளிகளில் அறிவியல் வட்டங்களை உருவாக்கி, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த கருத்துக்களை விவாதிக்கவும் உதவும். இதற்காக கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக தொடர் பணிகள் உருவாக்கப்படும். இவ்வாறு பேசினார்.
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின், 'கணிதம் மற்றும் அறிவியல் தேடல்' என்ற தலைப்பில், பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் திறன்களை வளர்ப்பதற்காக, ஆசிரியர்களுக்கான நுாலையும், மாணவர்களுக்கான நுாலையும் கருத்தாளர் வருணி வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் கோபால கிருஷ்ணன், 'ஐடியா ஆய்வகம் மற்றும் கணித ஆய்வகம் போன்றவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார். சென்னை வெங்கடேஷ், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார், திருவாரூர் மத்திய பல்கலையை சேர்ந்த மதுரிமா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
