டி.என்.பி.எஸ்.சி., தேர்வுப் பணி ஊதியத்தை உயர்த்த கோரிக்கை
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுப் பணி ஊதியத்தை உயர்த்த கோரிக்கை
UPDATED : செப் 28, 2026 02:08 PM
ADDED : செப் 28, 2026 02:10 PM
மதுரை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுகளை நடத்தும் அலுவலர்களில் துணைத்தாசில்தார், உதவியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி., நிறுவனம் பணியாளர் தேர்வுகளை நடத்தி வருகிறது. மாவட்டந்தோறும் உள்ள வருவாய் அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் நடத்துகின்றனர். இத்தேர்வு வினாத்தாள், விடைத்தாள், உபகரணங்கள் மாவட்டம் தோறும் ஒருவாரத்திற்கு முன்பே வந்து விடும்.
தேர்வு நாள் காலையில், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள், விடைத்தாள் உபகரணங்கள், பொருட்களை துணைத் தாசில்தார், போலீசார், உதவியாளர், அலுவலக உதவியாளர் வாகனங்களில் கொண்டு சேர்ப்பர். தேர்வு முடிந்தபின் மாலையில் உரிய மையங்களில் சேர்ப்பர். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் 2 மடங்கு உயர்ந்து விட்டது. தங்களுக்கு உயரவில்லை என வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
துணைத் தாசில்தார்களுக்கு ரூ.600, உதவியாளர்களுக்கு ரூ.400 பல ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. ஆனால் 8 மாதங்களுக்கு முன் போலீசாருக்கு ரூ.200ல் இருந்து ரூ.500, அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.200ல் இருந்து ரூ.400, டிரைவர்களுக்கு ரூ.200ல் இருந்து ரூ.500 என உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க தலைவர் கமலேஷ் கூறுகையில், “8 மாதங்களுக்கு மேலாக துணைத்தாசில்தார், உதவியாளர்களுக்கு மட்டும் தேர்வுப்பணிக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்காமல் உள்ளனர். அதனை உயர்த்தித் தரவேண்டும்,” என்றார்.
