UPDATED : டிச 30, 2010 12:00 AM
ADDED : டிச 30, 2010 03:28 PM
மாணவரிடம் அடாவடி முறையில் பண வசூலில் ஈடுபட முயன்ற கல்லூரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் யோகா மற்றும் நேச்சுரோபதிக்கான எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கலீல் அகமது என்ற மாணவர் நேச்சுரோபதி மற்றும் யோகா அறிவியல் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அக்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாததால், முதல் வருட படிப்புடன் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்பி, கல்லூரியிலிருந்து மாற்று சான்றிதழ் கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதை தர மறுத்ததோடு, மொத்தமாக 5.5 வருடங்களுக்கான கட்டணத்தை செலுத்தினால்தான், எதையும் செய்யமுடியும் என்று கூறிவிட்டது.
இதை எதிர்த்து அம்மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி. ராஜேந்திரன், கல்லூரியின் அடாவடி செயலை வன்மையாக கண்டித்ததோடு, மாணவரின் மாற்று சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக கொடுத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், அம்மாணவர் முதல் வருட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அதற்கான மதிப்பெண் பட்டியலையும் சேர்த்தே கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
