சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகம் வழங்குவதில் தாமதம்
சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகம் வழங்குவதில் தாமதம்
UPDATED : ஏப் 20, 2011 12:00 AM
ADDED : ஏப் 20, 2011 09:54 AM
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் விரிவுபடுத்தப்பட உள்ள சமச்சீர் கல்வி திட்டத்தில், 10ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் மாவட்டங்களுக்கு வந்து சேராததால், அவை மாணவர்களுக்கு கிடைப்பதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, புத்தகங்களும் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
இதில் முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடப்புத்தகங்கள் தமிழக பாடநூல் கழகத்தால் தயார் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், இந்த புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.
தேர்தல் முடிந்து புதிய அரசு இப்பாடப் புத்தகத்தை வெளியிட்ட பின்பே, பள்ளிகளுக்கு வழங்கப்படும். இதனால், மே முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களை, கடைசி வாரத்தில் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு அனுப்பப்படவில்லை.
பள்ளி இறுதி வேலை நாள் ஏப்., 21ல் முடிவடைகிறது. 10ம் வகுப்பு புத்தகம் கிடைத்தால் பள்ளிகள் கோடை விடுமுறையிலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கி விடுவர். அவற்றை அரசு வெளியிடும் முன் பள்ளிகளுக்கு சென்று விடும் என்பதால், இன்னும் அனுப்பப்படாமல் உள்ளன. எனவே அப்புத்தகங்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
