UPDATED : ஏப் 25, 2011 12:00 AM
ADDED : ஏப் 25, 2011 03:37 PM
முதுநிலை மற்றும் சிறப்பு வாய்ந்த மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்துள்ளது.
2012ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். முடிக்கும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள், தொடர்ந்து முதுநிலை படிப்பில் சேர வேண்டும் என்றால் என்.இ.இ.டி. எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்த தேர்வுக்கான அறிவிக்கை 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
நவம்பர் மாதத்திற்குள் அனுமதிக் கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். நுழைவுத் தேர்வு 2012 ஜனவரி மாதத்தில் நடைபெறும். எம்.டி., எம்.எஸ். வகுப்புகள் மே மாதம் 2ம் தேதி 2012ல் துவங்கும்.
இதேப்போல, நேரடியாக 5 ஆண்டு கால படிப்பான நீயுராலஜி சர்ஜரி மற்றும் நியூராலஜி சிறப்பு வாய்ந்த படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இதே என்.இ.இ.டி.-பி.ஜி. தேர்வினை எழுத வேண்டியது அவசியமாகும்.
இதற்கான பொது கேள்வித் தாள், எம்.பி.பி.எஸ். பாடத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். 180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வை எழுத 3 மணி நேரம் அளிக்கப்படுகிறது. இந்த வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும்.
எம்.டி..எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்கள், அல்லது 2012 ஜுன் மாதம் முடிப்பவர்கள், மேற்கொண்டு சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகளில் சேர வேண்டும் என்றால், என்.இ.இ.டி. எஸ்.எஸ். எனப்படும் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும்.
இந்த தேர்வினை 6,000 முதல் 7000 மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த மருத்துவ பாடப்பிரிவுகள் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது.
2012 பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பம் பெறுவது நிறைவடையும். ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும். அனுமதிக் கடிதம் மே மாதம் அனுப்பப்பட்டு ஜுன் மாதம் தேர்வு நடைபெறும்.
கேள்வித்தாள் 150 முதல் 180 கேள்விகள் கொண்டதாக இருக்கும். தேர்வு முறைகள் இன்னும் மத்திய சுகாதாரத் துறையால் இறுதி செய்யப்படவில்லை.
