UPDATED : ஆக 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உடுமலை: ஆசிரியர்களின் குறைகளை கேட்டறியும் வகையில் முகாம் நடத்துவது போல, ஆசிரியர் சங்கங்களின் குறைகளை கேட்பதற்கு, சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களது குறைகளை போக்க, ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த,தொடக்க கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கடந்த சனிக்கிழமை ஒவ்வொரு உதவித்தொடக்க கல்வி அலுவலகத்திலும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதுபோன்று, ஆசிரியர்கள் சங்கங்களின், குறைகளை கேட்டறியும் வகையில், சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொடக்க கல்வித் துறை ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து சங்க பிரதிநிதிகள், தொடக்க கல்வி இயக்குநரை பார்க்க வரும்போது, இயக்குநர் அலுவலகப் பணியாக வெளியே செல்வதால் சந்திக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
மேலும், கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்களை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால், ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, ஆசிரியர்களின் குறைகள் உரிய நேரத்தில் களையப்பட வேண்டும் என்று கருதி, ஒவ்வொரு மாதமும், 4வது வார சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி அளவில் அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் மாநிலப் பிரதிநிதிகளின் கூட்டம், தொடக்க கல்வி இயக்ககத்தில் நடத்தப்படும்.
வரும் 30ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடக்க கல்வி இயக்ககத்தில் முதல் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

