மாநில கற்றல் அடைவு சர்வே நடத்த 1,125 கல்லுாரி மாணவர்கள் தேர்வு
மாநில கற்றல் அடைவு சர்வே நடத்த 1,125 கல்லுாரி மாணவர்கள் தேர்வு
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 09:46 AM
கோவை:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான, மாநில கற்றல் அடைவு சர்வே நடத்த, 1,125 கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்படவுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில், மூன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, மாநில அளவிலான கற்றல் அடைவு சர்வே, நவ., 3ம் தேதி நடத்துகிறது.இதற்கு, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி மையம் சார்பில், தமிழ், ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு, &'ரேண்டம்&' முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுத்து, தேர்வு நடத்தப்படும்.தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு மட்டும், 60 மதிப்பெண்கள் வரை தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆசிரியர்கள் அல்லாமல், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மாணவர்கள், பட்டதாரி மாணவர்கள் கொண்டு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 1,022 பள்ளிகளில் இருந்து, மூன்றாம் வகுப்பில் 8 ஆயிரத்து 805 மாணவர்கள், ஆறாம் வகுப்பில் 9 ஆயிரத்து 270 பேர் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் 10 ஆயிரத்து 446 மாணவர்கள் என, 28 ஆயிரத்து 521 பேர் இத்தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்கு, 1,125 கல்லுாரி மாணவர்கள் கொண்டு, தேர்வு நடத்தப்படவுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆசிரியர்கள் வழக்கமான கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதால், சர்வே தேர்வு, கல்லுாரி மாணவர்கள் கொண்டு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் இத்தேர்வு நடத்தவுள்ள, 1,125 கல்லுாரி மாணவர்களுக்கு விரைவில், தேர்வு நடத்தும் வழிகாட்டுதல் குறித்து பயிற்சி வழங்கப்படும்.இவர்களை, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிப்பர். சர்வே முடிவுகள் அடிப்படையில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியத்தை தேர்வு செய்து, சிறப்பு கற்றல் திட்டங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
