புதிய பெயர்களில் பட்டப்படிப்புகள்! பிளஸ் 2 மாணவர்களே உஷார்
புதிய பெயர்களில் பட்டப்படிப்புகள்! பிளஸ் 2 மாணவர்களே உஷார்
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 11:26 AM
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், புதிய பெயர்களில் முக்கிய பாடங்களுக்கு இணை என கூறி, பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய பெயர்களை கொண்ட பாடப்பிரிவுகளில் சேரும் போது, அப்பாடம், உரிய அங்கீகாரம், அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என கல்வியாளர் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கையில் எப்போதும் போட்டிகள் நிலவும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு பாடப்பிரிவில் சேர்க்க கூடாது என்பதால், அத்துறையை மையமாக கொண்டு பல்வேறு இணை படிப்புகள் துவக்குவது வழக்கம்.உதாரணமாக, பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக போட்டிகள் இருக்கும். பி.காம்., பிரிவில் மட்டுமே 23 பெயர்களில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒரு பாடத்திட்டத்தில், 75 சதவீத பாடங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, இணை என்ற சான்று அரசால் வழங்கப்படும். 75 சதவீத்திற்கும் அதிகமாக வேறுபாடுகள் இருப்பின், அப்படிப்பு இணையாக கருதப்படாது.அதுபோன்று, கடந்த ஆண்டுகளில், பொருளாதார படிப்பை பிசினஸ் எக்கனாமிக்ஸ், தமிழ் இலக்கியத்தை, தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு, வேதியியல் படிப்பை, ஆர்கானிக் வேதியியல் என பல்வேறு பெயர்களில் பட்டியலிடப்படுகின்றன.பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் உட்பட குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புக்கு, அதுசார்ந்த முக்கிய பாடங்களுக்கு இணை அல்ல என பட்டியல் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது. பிரபல கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற சில படிப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 முடித்து கல்லுாரிகள் சேரும் மாணவர்கள், சேர்க்கை புரியும் கல்லுாரிகள் மட்டுமின்றி, நாம் சேரும் பாடமும் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசியம். இணை இல்லாத படிப்புகளை படித்தால், வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் போது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.இதுகுறித்து, கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:
கல்லுாரியில் சேரும் மாணவர்கள், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் உள்ளதா என்பதையும், கலை, அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு, யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பாடப்பிரிவுகளுக்கு உரிய பல்கலை மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளின் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். பி.காம்., கிடைக்காமல் அதுசார்ந்த படிப்புகளை எடுக்கும் மாணவர்கள், பாடத்திட்டம், 75 சதவீதமாவது இணையாக உள்ளதா என்பதை, முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும், பாடத்திட்டங்கள் இணை அல்ல போன்ற அறிவிப்புகளை திடீரென்று வெளியிடாமல், உரிய அவகாசம் அளிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள், உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை, உயர்கல்வி மன்றம், பல்கலைகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டால் மாணவர்கள் பாதிக்காமல் இருப்பர் என்றார்.