தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்கவைப்பு

நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்கவைப்பு

நீட் வினாத்தாள் தயாரித்த பேராசிரியர் குழு 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்கவைப்பு


UPDATED : ஜூன் 09, 2026 10:11 AM

ADDED : ஜூன் 09, 2026 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 10:11 AM ADDED : ஜூன் 09, 2026 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
'நீட்' மறுதேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்கள் குழு, வரும் 21ம் தேதி வரை ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடந்தது.

தேர்வு ரத்து

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும், 22 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்பே கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, வரும் 21ம் தேதி மறுதேர்வு நடக்கவுள்ளது. நாடு முழுதும் 551 நகரங்களில், பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:15 மணி வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், 11 பேரை கைது செய்து உள்ளனர்.

வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்களே பெரும்பாலும் இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டிருந்ததும், தயார் செய்த வினாக்களை மாணவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, நடக்கவிருக்கும் மறுதேர்வுக்கான வினாத்தாள் கசியாமல் தடுக்க, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது குறித்து தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாணவர்கள் சிரமமின்றி மறுதேர்வு எழுத தீவிர கண்காணிப்பில் என்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது.

ரகசிய இடம்

குறிப்பாக, வினாத்தாள் தயாரித்த குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள், வினாத்தாள் உருவாக்கத்தின் ரகசிய கட்டங்களுடன் தொடர்புடைய பிற பணியாளர்கள், 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

'மொபைல் போன்கள், லேப் டாப்கள், ஸ்மார்ட்' கைக்கடிகாரங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணையதள பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளித்தொடர்புகளுக்கு அனுமதி இல்லை. அவர்கள் இருக்கும் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதி உண்டு.

வரும் 21ம் தேதி வரை அவர்கள் ரகசிய இடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருப்பர். வினாத்தாள் உருவாக்கம், அச்சிடுதல், பேக்கிங் செய்தல், போக்குவரத்து மற்றும் இறுதி வினியோகம் வரை ஒவ்வொரு கட்டமும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு பணியில் விமானப்படை விமானங்கள்

நாடு முழுதும் உள்ள 18 இடங்களில் இருந்து நம் விமானப் படை விமானங்கள் வாயிலாக, வினாத்தாள் உள்ளிட்ட நீட் மறுதேர்வுக்கான பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வை பாதுகாப்பாகவும், சுமுகமாகவும் நடத்துவதற்கான பொறுப்பு விமானப் படையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதிகாரிகள் கோரும் கூடுதல் உதவிகளை வழங்க ஆயுதப்படை தயாராக இருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us