விடுதி ஊழியரின் அலட்சியம் எலி மருந்தால் 3 மாணவர் சீரியஸ்
விடுதி ஊழியரின் அலட்சியம் எலி மருந்தால் 3 மாணவர் சீரியஸ்
UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 10:39 AM
பெங்களூரு:
பெங்களூரு கல்லுாரி விடுதியில், எலி ஒழிப்பு மருந்தில் இருந்து எழுந்த புகையால், 19 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஞானபாரதி பகுதியில், ஆதர்ஷா நர்சிங் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் விடுதி உள்ளது. இங்கு தினமும் இரவு 8:00 மணியளவில், மாணவர்களுக்கு உணவு பரிமாறுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, டைனிங் ஹாலில் மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த அறையில் எலிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது.
அவற்றை ஒழிப்பதற்காக ஊழியர் மஞ்சுநாத், மாணவர்கள் சாப்பிடுவதை பொருட்படுத்தாமல், கொசுவர்த்தி சுருள் போன்ற எலி மருந்து வைத்துள்ளார். அதில் இருந்து புகை எழுந்தது. இதை மாணவர்கள் சுவாசித்ததுடன், உணவின் மீதும் படிந்தது.
இதனால், உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், மயங்கி விழுந்த 19 மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர்களில் ஜெயந்த் வர்கீஸ், திலீஷ், ஜோமொன் ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். மாணவர்கள் சாப்பிடும்போது, விஷத்தன்மை கொண்ட எலி மருந்தை பற்ற வைத்ததே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது தெரிந்தது.
இதையடுத்து, விடுதி நிர்வாகம், வார்டன், ஊழியர் மஞ்சுநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மஞ்சுநாத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.