ஸ்டார்ட் அப் ஐடியாவிற்கான ஜல்லிக்கட்டு 3.0 போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ஸ்டார்ட் அப் ஐடியாவிற்கான ஜல்லிக்கட்டு 3.0 போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:24 AM
மதுரை:
கல்லுாரி மாணவர்கள் தங்களது தொழில் ஐடியாக்களை வடிவமைக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டு 3.0 போஸ்டரை கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மதுரையில் அறிமுகப்படுத்தினார்.
மதுரை வேளாண் கல்லுாரியில் மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் (மாபிப்) சார்பில் புவிசார் குறியீடு மற்றும் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தயாரித்த வேளாண் பொருட்களுக்கான கண்காட்சி நேற்று தொடங்கியது.
பல்கலை வேளாண் வணிகத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். மதுரை விவசாய கல்லுாரி, சமுதாய அறிவியல் கல்லுாரி டீன்கள் மகேந்திரன், காஞ்சனா, பல்கலை பயோடெக்னாலஜி இயக்குநர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் சங்கர்நாராயணன் பேசுகையில்,கொரோனா காலத்திற்கு பிறகு விவசாயத் தொழிலில் ஈடுபடுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நபார்டு வங்கி மாபிப் அமைப்பிற்காக ரூ.12 கோடி வரை வழங்கியுள்ளது. இந்த அமைப்பானது தொழில்முனைவோரின் எல்லா சந்தேகங்களுக்கும் விடை தருவது போல இருக்க வேண்டும். தொழில் சிந்தனையுடன் இங்கு வருபவர்கள் தொழில்முனைவோராக உருமாற வேண்டும் என்றார்.
கம்பம் திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றிதழை வழங்கிய பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், தொழில் சிந்தனையுடன் வருபவர்களுக்கு பல்கலையின் இன்குபேஷன் மையம் நிதி வழங்கி ஊக்குவிக்கிறது. அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும் வரை துணை நிற்கிறது. விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து விட்டதுடன் வேலை முடிந்து விடாது. விற்பனை வாய்ப்பை பெருக்கினால் தான் ஏற்றுமதிக்கு செல்ல முடியும் என்றார்.
கல்லுாரி மாணவர்கள் தங்களது தொழில் ஐடியாக்களை வடிவமைக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டு 3.0 போஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கலை, அறிவியல், வேளாண், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். சிறந்த ஐடியாக்களுக்கு பரிசும் வழங்கி தொழில்முனைவோராக ஊக்கமளிக்கப்படும் .