UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரிகளை, அரசு ஒருமை பல்கலையாக (யுனிட்டரி யுனிவர்சிடி) தரம் உயர்த்த, தமிழ்நாடு ஆசிரியர் கழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
அரசு கல்லூரிகளை, அரசு ஒருமை பல்கலையாக மாற்றும் அரசின் கொள்கை முடிவை ஒரு மனதாக ஆசிரியர் கழகம் நிராகரிக்கிறது.
மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், ஆசிரியர்கள் உட்பட லட்சக்கணக்கானவர்களிடம் கையெழுத்து பெற்று தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து, ஒருமை பல்கலை அறிவிப்பை திரும்ப பெறச் செய்ய வேண்டும்.
அரசு பாடப்பிரிவுகளாக தற்போது மாற்றப்பட்டுள்ள 264 பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையம் உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அரசு கல்லூரிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் தற்போதைய நடைமுறையில் பல்வேறு குளறுபடி, தவறு நடந்துள்ளது. இத்தேர்வை உடனே ரத்து செய்ய ஆசிரியர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்பது உட்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு கல்லூரிகளை ஒருமை பல்கலையாக மாற்ற தமிழக அரசு, அவசர சட்டம் அல்லது சட்டசபையில் முன் வரைவு கொண்டு வந்தால், அந்த நாளில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, ஆசிரியர் தினமான செப்.,5ல், ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவது, எட்டு மண்டலங்களிலும் செப்.,6ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வது, அக்.,11ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது, நவ.,5ல், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் மாநில அளவிலான பேரணியை சென்னையில் நடத்துவது, குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் துவங்கவுள்ள நாள் முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

