UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM
ADDED : ஜூன் 02, 2011 10:43 AM
உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி 447 மதிப்பெண் பெற்று உண்டு உறைவிடப்பள்ளி மாணவ, மாணவிகளில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் படித்த 26 மாணவிகள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை, பாட புத்தகங்கள், இருப்பிடம் அனைத்தும் இலவசமாக அளித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதேப்போன்று தமிழகம் முழுவதும் 106 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் தேர்வு எழுதிய 26 மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் கூலித் தொழிலாளியின் மகள் பார்வதி 447 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். மாணவியை ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் உடனிருந்தார்.
