UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM
ADDED : ஜூன் 02, 2011 10:46 AM
எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர்கள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரப்பினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர்கள் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்படுவர்.
அவர்கள் விரும்புகின்ற தமிழகத்தில் தலை சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பயில நிதியுதவியாக 56 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இரண்டாண்டுக்கு 56 ஆயிரம் ரூபாய் நிதியதவி வழங்கப்படுகிறது. உதவி பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவியர் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து நிதியுதவி பெற்று பயன்பெறலாம்.
