கல்வித்துறையில் பணியாளர் பற்றாக்குறை; வேலைப்பளு அதிகரிப்பு
கல்வித்துறையில் பணியாளர் பற்றாக்குறை; வேலைப்பளு அதிகரிப்பு
UPDATED : ஆக 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழக கல்வித்துறையில் புதிய பணியிடம் உருவாக்கப்படாததாலும், காலிப்பணியிடம் நிரப்பாததாலும், பள்ளி மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், பணியாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களின் சம்பளம், நிர்வாகம் உள்ளிட்ட வசதிகளுக்காக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் மாவட்ட மற்றும் தாலுகா வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பள்ளி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலிப்பணியிடமும் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன.
ஆனால், ஆசிரியரல்லாத கல்வித்துறை பணியாளர் நிலை அப்படியில்லை. பள்ளி, வேலைப்பளு அதிகரித்தாலும், புதிய பணியிடம் எதுவும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கப்படவில்லை.
பணியாளர் ஓய்வு பெறுவதால் காலியாகும் பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை. அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் பணியாளர் பற்றாக்குறை மிக அதிகளவில் உள்ளது. ஆசிரியர் பணிவிவரம் மற்றும் பதிவேடுகளை பராமரிப்பதில் மட்டுமின்றி, பல்வேறு பணியும் முடங்கி வருகின்றன.
கல்வித்துறை பணியாளர்கள் கூறியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் கல்வித்துறையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென தனியாக ஆட்களும் நியமிக்கப்படவில்லை. தேர்வுத்துறை இயக்குனரகம் தனியாக இயங்கினாலும், அவை நடத்தும் அனைத்து தேர்வுப் பணிகளும் கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது.
காலியாகும் பணியிடங்களும் நிரப்பப்படுவதே இல்லை. வேலைப்பளுவை குறைக்க அலுவலக பணியாளர்கள் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளில் ஒரே ஒரு பணியாளர் கூட இல்லாத நிலையும் உள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, எடுக்கும் தொடர் முயற்சிகளில் 10 சதவிகிதம் கூட ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிக்க எடுப்பதில்லை. அதனால், ஏராளமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. வழங்கப்படும் பணிகள் குறித்த கெடுவுக்குள் முடிக்கவும் முடியவில்லை.
‘எக்காரணம் கொண்டும் ஆசிரியரை இப்பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது’ என உத்தரவிடப் பட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்களை நியமிக்கவும் விதிமுறைகள் இல்லை. கல்வித்துறை அலுவலக பணிகள் தேக்கம் அடைந்தால், ஆசிரியர் மட்டுமின்றி, மாணவ, மாணவியரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

