இன்ஜினியரிங் ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு
இன்ஜினியரிங் ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு
UPDATED : ஆக 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திண்டுக்கல்: இன்ஜினியரிங் கல்லூரியில், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்கள் தகுதியையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள திருச்சி அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளதாக துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சி அண்ணா பல்கலை., துவங்கியபோது நான்கு இளநிலை இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மட்டும் இருந்தன. இந்த ஆண்டு 10 இளநிலை பாடப்பிரிவுகளும்,ஐந்து முதுநிலை பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. நானோ தொழில் நுட்பம்,மொபைல் தொழில் நுட்ப பாடப்பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இன்ஜி., கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பி.இ., பட்டம் மட்டும் பெற்று விட்டு, மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். எம்.இ., பி.எச்டி., பட்டம் பெற்ற ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர்.
திருச்சி மண்டலத்தில் உள்ள 64 இன்ஜி., கல்லூரிகளில் 30 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆசிரியர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள அண்ணா பல்கலை ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது 600 ஆசிரியர்கள் இதில் படித்து வருகின்றனர். இவர்களில் 400 பேர் பாலிடெக்னிக் ஆசிரியர்கள். இவர்களுக்கு அனுபவ அறிவு அதிகமாக இருந்தபோதும், படிப்பறிவை மேம்படுத்திக் கொள்ள இந்த அமைப்பு உதவியாக உள்ளது. இது போல இன்ஜி., கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு திருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பல்கலை., கல்லூரிகள் அமைய உள்ளது. வரும் அக்டோபரில் கட்டட பணிகள் துவங்க உள்ளன. அரியலூர், பண்ருட்டி கல்லூரிகளில் அப்பகுதியினரின் வேண்டுகோளின் படி பகுதிநேர வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
நான்கு அண்ணா பல்கலையிலும் முதல், 2ம் ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதில் 5 சதவீதம் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு உள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரும் கல்வி ஆண்டில் பல்கலை கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்டுள்ளோம்.
இந்த ஆண்டு தமிழகத்தில் 342 இன்ஜி கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 7 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

