புத்தகங்களுக்காக வசூலித்த கட்டணம் திரும்ப கிடைக்குமா?
புத்தகங்களுக்காக வசூலித்த கட்டணம் திரும்ப கிடைக்குமா?
UPDATED : செப் 02, 2011 12:00 AM
ADDED : செப் 02, 2011 06:15 PM
இந்த கல்வியாண்டில் சமச்சீர் பாடப்புத்தகம் அறிமுகமாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தினால் எந்த கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே, தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் போது புத்தகங்களுக்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்பட்டது. புத்தகத்திற்கு என ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், எந்த புத்தகமும் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். சிலர் பழைய முறை புத்தகங்களைக் கொடுத்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில் இலவச சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு வகுப்பு வாரியாக 200 ரூபாய் முதல் 350 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டு, தற்போது பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, புத்தகங்களுக்காக பள்ளிகள் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்காத பள்ளி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களின் விலை அதிகபட்சமாக 350 ரூபாய் மட்டுமே இருக்கும் நிலையில், புத்தகங்களுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை வசூலித்த பள்ளிகளை, கட்டணத்தை திரும்ப அளிக்க தமிழக அரசு உத்தரவிடுமா என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
