அதிவேகத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்
அதிவேகத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்
UPDATED : நவ 05, 2011 12:00 AM
ADDED : நவ 05, 2011 10:47 AM
திருப்பூர் : வேகக்கட்டுப்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதால், திருப்பூரில் மாணவர்கள் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
அதிவேகமாகச் செல்வதால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது. வீட்டில் இருந்து மாணவர்களை அழைத்து வரும்போதும், வகுப்பு முடிந்து, திருப்பி விடும்போதும் வாகனத்தை தேவையில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது; மாணவர்கள் தவிர மற்றவர்களை பள்ளி வாகனத்தில் அனுமதிக்கக் கூடாது.
வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களில் கட்டாயம் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் போன்ற விதிகள் உள்ளன. ஆரம்பத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதால், திருப்பூரில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஓரளவு விதிகளை பின்பற்றின. தற்போது ஆய்வில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு அதிவேகத்தில் செல்கின்றன.
போக்குவரத்து மிகுந்த திருப்பூரில், கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் செல்வதால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. திருப்பங்கள், வளைவு, வேகத்தடைகளை கூட, அநாயாசமாக தாண்டிச் செல்வதால், அதில் பயணிக்கும் மாணவர்கள் தடுமாறுகின்றனர். அவசரமாக செல்வதற்காக, தேவையில்லாத இடங்களிலும் ஹாரன் அடித்துச் செல்வது, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிட மறுப்பது, மொபைல்போன் பேசியபடி ஓட்டுவது என விதிகளை பின்பற்றாமல் இயங்கும் பள்ளி, கல்லூரி வாகனங்களால், சக வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கக்கூடிய அபாயம் உள்ளது.
மாணவர்களை வைத்துக்கொண்டு இதுபோன்று விதிகளை பின்பற்றாமல் செல்லும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபரீதங்களை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் கொஞ்சம் இறுக்கிப்பிடிப்பது அவசியம்.
