UPDATED : நவ 14, 2011 12:00 AM
ADDED : நவ 14, 2011 10:16 AM
தினமலர் நாளிதழும், அருண் ஐஸ்கிரீம் நிறுவனமும் இணைந்து, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில், மூன்று முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான, குழந்தைகள் தின சிறப்பு போட்டிகளை நடத்தியது. போட்டிகள் காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், 8 மணிக்கே, குழந்தைகளுடன், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்தனர்.
காலை 9 மணிக்கு துவங்கிய போட்டிகள், பங்கேற்பாளர்கள் கூடிக்கொண்டே போனதால், மாலை 5 மணி வரை நீடித்தது. வடசென்னை மட்டுமின்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். முதலில் ஒருவர், இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
பெற்றோர், மாணவர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் அன்பு வேண்டுகோள் ஏற்கப்பட்டு, ஒருவர் எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த குட்டீஸ்களுக்குள், இவ்வளவு திறமையா என அனைவரும் வியக்கும் வகையில், மாறுவேடப் போட்டியில் எல்லாரும் அசத்தினர். அடுத்து, ஆடலுடன் பாடல், பரதநாட்டியம் என அசத்திய குழந்தைகள், மனப்பாடம், படம் வரைந்து வண்ணம்தீட்டுதல், வினாடி-வினா, வார்த்தை விளையாட்டு என புத்திக்கூர்மையாலும் அசத்தினர்.
குழந்தைகள் போட்டித் திறனைப் பார்த்த நடுவர்கள் வியந்தார்களோ இல்லையோ, அவர்களின் பெற்றோர் அடைந்த குதூகலத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாலையில், போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, அருண் ஐஸ்கிரீம் கூடுதல் பொதுமேலாளர் செந்தில்குமார், டான்பாஸ்கோ பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
