கிழக்கும், மேற்கும் சங்கமிக்கும் ஹாங்காங் படிப்பு!
கிழக்கும், மேற்கும் சங்கமிக்கும் ஹாங்காங் படிப்பு!
UPDATED : மார் 01, 2013 12:00 AM
ADDED : மார் 02, 2013 05:45 PM
அதேசமயம், வெறும் சர்வேக்களின் அடிப்படையில் மட்டுமல்லாது, பன்முக கலாச்சார நெகிழ்வுத் தன்மைக்கு இப்பல்கலைக்கழகம் பெயர்பெற்று விளங்குவதும் ஒரு முக்கிய காரணம். இங்கே, மேற்கு மற்றும் கிழக்கின் கலாச்சாரங்கள் சிறப்பான முறையில் சங்கமித்து செயல்படுகின்றன.
இந்த ஹாங்காங் நகரம், சர்வதேச நிதி மையங்களில் ஒன்று. பல பன்னாட்டு நிறுவனங்கள், இங்கே தமது செயல்பாடுகளை மேற்கொள்வதை நாம் காணலாம். சைனாவின் இதர முக்கிய மற்றும் மையப் பகுதிகளுக்கும், உலகின் இதர நாடுகளுக்கும் இடையே, வணிக செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு சிறப்பான பாலமாக இந்த ஹாங்காங் நகரம் செயல்படுகிறது. உலகளாவிய வணிக செயல்பாடுகளில் இந்நகரம் முக்கிய பங்கை ஆற்றுவதோடு, ஏராளமான பணி வாய்ப்புகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
உயர்தர கற்பித்தல்
அங்குள்ள கல்லூரிகள், குறிப்பாக, யுனிவர்சிட்டி ஆப் ஹாங்காங் மற்றும் ஹாங்காங் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி போன்றவை, உயர்தர கற்பித்தல் முறை, சர்வதேச தரம் வாய்ந்த கல்விச்சூழல் மற்றும் மாணவர்களுக்கான அதிகளவு வேலை வாய்ப்பு போன்ற அம்சங்களுக்கு பெயர்பெற்று விளங்குகின்றன.
குழுவாக பணிபுரிதல், ப்ராஜெக்ட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் போன்றவை, கற்றல் செயல்பாட்டை, தரம் வாய்ந்ததாக மாற்றுகின்றன. வகுப்புகளில், சிறு குழுக்களான நடத்தப்படுகின்றன. இதன்மூலம், மாணவர்கள் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தல் மற்றும் விரிவான கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுதல் போன்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், ஹாங்காங்கை பொறுத்தவரை, தொழில்நுட்ப வசதிகளுக்கு பஞ்சமேயில்லை.
படிப்பின் காலஅளவு
பெரும்பாலான இளநிலைப் படிப்புகள், முழுநேர படிப்பு என்ற வகையில், 3 ஆண்டுகளில் முடிவடைந்து விடுகின்றன. ஸ்பெஷலைஸ்டு துறைகள் அல்லது கூட்டு பட்டப் படிப்புகள் ஆகியவை 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். ஹாங்காங்கை சாராத சில மாணவர்கள், இளநிலைப் படிப்பிற்கு அவர்களை தயார் செய்துகொள்ளும் வகையில், Foundation Year என்ற படிப்பை மேற்கொள்ளலாம். ஆனால், இளநிலை பட்டம் பெற 4 ஆண்டுகள் படிப்பு தேவை என்ற அமெரிக்க முறையை ஹாங்காங் கல்வி நிறுவனங்கள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளன.
முதுநிலைப் படிப்பை முடிக்க 1 அல்லது 2 ஆண்டுகள் ஆகின்றன. ஹாங்காங்கில், இந்திய மாணவர்கள், பொறியியல் மற்றும் வணிகம் தொடர்பான படிப்புகளையே விரும்புகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் பல, ஹாங்காங்கில் கொடிகட்டி பறப்பதால், இங்கே வணிக படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்கள் கிடைக்கின்றன.
கல்வி ஆண்டு
ஹாங்காங்கில், ஒரு கல்வியாண்டு என்பது, 2 பருவங்களைக் கொண்டது. செப்டம்பர் முதல் வாரம் தொடங்கி, டிசம்பர் இறுதிவாரம் வரை ஒரு பருவமும், ஜனவரி மத்தியில் தொடங்கி, மே மாதம் வரை ஒரு பருவமும் கணக்கிடப்படுகின்றன. பொது விடுமுறை நாட்கள், செமஸ்டர் இறுதியில் ஈடுசெய்யப்படுகின்றன.
ஹாங்காங்கில் பொது விடுமுறை நாட்கள் 12. முதலாமாண்டு மாணவர்களுக்கான ஓரியண்டேஷன் வகுப்புகள், வழக்கமாக, ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடத்தப்படும். முதுநிலைப் படிப்புகளுக்கான தகுதிகள், நீங்கள் எந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அதைப் பொறுத்து மாறுபடும்.
எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்?
பொதுவாக, நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதியானது, ஒரு செமஸ்டருக்கு முன்னதாகவே அமைகிறது. மேலும், நீங்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனத்தில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி குறித்து, முன்னதாகவே, நன்கு விசாரித்து அறிந்து கொள்ளவும்.
தகுதிவாய்ந்த இந்திய மாணவர்கள், NON JUPAS என்ற திட்டத்தின் கீழ், ஹாங்காங் கல்வி நிறுவனங்களில், படிப்பதற்காக விண்ணப்பிக்கின்றனர். வெளியிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கானது இந்த திட்டம். சர்வதேச அளவில் தகுதி பெற்றிருக்கும் மாணவர்களே, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமாக, ஒரே தடவையில் பூர்த்திசெய்துவிட வேண்டும். ஏனெனில், விண்ணப்பங்களை SAVE செய்யும் PROVISION கிடையாது. எனவே, விண்ணப்பித்தலுக்கு அமரும் முன்பாக, தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் இதர அம்சங்களை நன்கு சரிபார்த்துக் கொள்வது நல்லது. சில படிப்புகளுக்கு, கிரேடு 9 முதல் கிரேடு 12 முறையிலான உங்களின் ஆவணங்கள் தேவைப்படும். பரிந்துரைகள், கட்டாயம் தேவையில்லை. அதேசமயம், பள்ளி ஆலோசகரின் பரிந்துரைகள், உங்களுக்கு உதவிபுரியும்.
சில கல்வி நிறுவனங்கள் எழுத்துத் தேர்வை நடத்தும். உங்களின் விண்ணப்பம் அல்லது ஆவணங்களில் குறிப்பிட்டிராத விஷயங்களை குறிப்பிட, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
சேர்க்கை நடைமுறை
இளநிலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள், தங்களின் ஆங்கிலப் புலமையை நிரூபிக்க, TOEFL அல்லது IELTS தேர்வு மதிப்பெண்ணை சமர்ப்பிக்க வேண்டும். SAT தேர்வு கட்டாயமில்லை என்றாலும், ஒருவர் அதை எழுதியிருந்தால், அதன் மதிப்பெண்ணை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம், உங்களின் விண்ணப்பம் பலம் பெறும்.
முதுநிலைப் படிப்பை பொறுத்தவரை, ஒருவர் தனது இளநிலைப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கையில், விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவில், 3 ஆண்டுகள் நடைபெறும் இளநிலைப் படிப்பு தகுதியை ஹாங்காங் ஏற்றுக்கொள்கிறது. எம்பிஏ சேர்க்கையைப் பொறுத்தவரை, குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவமும், GMAT மதிப்பெண்களும் அவசியம்.
கட்டணம் மற்றும் செலவினங்கள்
இளநிலைப் படிப்பிற்கு, 17,100 அமெரிக்க டாலர்கள் முதல், 17,706 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். முதுநிலைப் படிப்பிற்கு, 9,675 அமெரிக்க டாலர்கள் முதல், 17,500 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். சிட்டி யுனிவர்சிட்டி ஆப் ஹாங்காங், வாழ்க்கை செலவினம், மாதத்திற்கு, 774 அமெரிக்க டாலர்கள் முதல், 1,129 அமெரிக்க டாலர்கள் வரை ஆகும் என்று மதிப்பிட்டுள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் பொது செலவினங்கள் போன்றவை இதில் அடங்கும்.
எம்பிஏ படிப்பை பொறுத்தவரை, 51,471 டாலர்கள் செலவாகிறது. சர்வதேச மாணவர்களுக்கு, பல உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதைப்பற்றிய விவரங்கள் அந்தந்த கல்வி நிறுவனத்தின் இணையதளங்களிலேயே கிடைக்கும். ஒவ்வொரு உதவித்தொகைக்கும், பண அளவுகள் மாறுபடும்.
விசா
ஒரு குறிப்பிட்ட ஹாங்காங் கல்வி நிறுவனத்தின் சேர்க்கை அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே, மாணவர் விசா பெறுவதற்கான உதவிகளை செய்யத் தொடங்கும். அந்தக் கல்வி நிறுவனம், ஸ்பான்சராக செயல்பட்டு, ஹாங்காங் குடியேற்றத் துறைக்கு, சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பத்தை அனுப்புகிறது.
இத்துறை, இதுதொடர்பான பேப்பர் ஒர்க் பணிகளை மேற்கொள்கிறது. அவற்றில் நிதிநிலை சம்பந்தமான ஆவணங்களும் அடக்கம். இத்துறைக்கு, குறைந்தது 6 வாரகால அவகாசம் தேவை.
பணி வாய்ப்புகள்
உங்களின் மாணவர் விசா, படிக்கத்தான் அனுமதிக்குமே ஒழிய, பணி செய்வதற்கல்ல. 1 ஆண்டுக்கும் குறையாத முழுநேர படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் விசயத்தில், சில தளர்வுகள் உண்டு. 2008-09 கல்வியாண்டு முதல், படிப்பு தொடர்பான இன்டர்ன்ஷிப்புகள், வளாக பணிகள்(Campus job) அல்லது கோடைகால பணிகள்(Summer jobs) ஆகியவற்றை மேற்கொள்ள, மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் விபரங்கள்,
* பகுதிநேர வளாகப் பணியைப் பொறுத்தவரையில், ஆண்டு முழுவதும், ஒரு வாரத்திற்கு, 20 மணிநேரங்களுக்கு குறையாமல் பணிபுரிய அனுமதி உண்டு.
* கோடை காலத்தின்போது, எந்த வரம்புமின்றி, பணிபுரியும் உரிமையுண்டு.
ஹாங்காங் வாழ்க்கை
ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதியான இருந்தாலும், நெடுங்காலம், பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே இங்கே, பன்முக வாழ்க்கை கலாச்சாரம் வலுவாக இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள், குறிப்பாக இந்தியர்கள், ஹாங்காங் வாழ்க்கைக்கு எளிதில் பழகிக்கொள்கிறார்கள். மாணவர்களுக்கு, பேராசிரியர்களிடமிருந்து சிறப்பான வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன.
ஹாங்காங் மக்கள், சர்வதேச மாணவர்களை, இன்முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். மேற்கும், கிழக்கும், கலாச்சார முறையில் சங்கமிக்கும் இடமாக ஹாங்காங் திகழ்கிறது. இங்கே, மாணவர்கள் உலகளாவிய அனுபவத்தைப் பெற முடியும். தங்களின் அறிவை விரிவாக்கிக் கொள்ளும் வகையில், பலவிதமான நடவடிக்கைகளில், மாணவர்கள் ஈடுபட முடியும்.
அங்குள்ள உணவைப் பழகிக் கொள்வது சற்று சிரமமாக இருந்தாலும், காலப்போக்கில் அதை எளிதாக பழகிக் கொள்ளலாம். எனவே, ஹாங்காங் படிக்க செல்வதற்கான தேவையற்ற தயக்கங்களை துறக்கும் நேரமிது.
