UPDATED : மார் 06, 2013 12:00 AM
ADDED : மார் 06, 2013 08:13 AM
சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியேற்று, இரு மாதங்களாகியும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
சென்னை பல்கலையின், புதிய துணைவேந்தராக தாண்டவன், ஜனவரியில் பதவியேற்றார். இவர், பதவியேற்று இரு மாதங்களாகியும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பணியிடங்கள், நிரப்பப்படாமலேயே உள்ளன.
இதில், பதிவாளர் பணியிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் நிர்வாக பணிகள் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டில் வருகிறது. ஒன்பது மாதங்களாக, இப்பணியிடம் காலியாக உள்ளதால், பணிகள் ஆமை வேகத்தில் நகர்கிறது. தற்போது, பதிவாளர் பொறுப்பை, ஆராய்ச்சி பிரிவு முதல்வர் கவனித்து வருகிறார்.
ராஜீவ் காந்தி ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட, பிற பொறுப்புகளையும், இவர் வகிப்பதால், பதிவாளர் பொறுப்பை, முழுமையாக கவனிக்க முடியவில்லை என, கூறப்படுகிறது.
விரைவில் நடக்கவுள்ள, 155வது பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறவுள்ள, எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வு பணிகளுக்கு, ஒப்புதல் அளிப்பதும் நிலுவையில் உள்ளதாக, ஆராய்ச்சி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவாளர் போன்ற முக்கிய பதவிகளை, மிகக் குறுகிய காலத்துக்குத் தான், மற்ற ஒரு அதிகாரி கூடுதலாக கவனிக்க முடியும். ஆனால், ஒன்பது மாதங்களாக, பொறுப்பு பதிவாளரே தொடர்வது, பல்கலை நிர்வாகத்துக்கு உகந்தது அல்ல என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிபதிவாளர் பதவியைப் போலவே, மிகவும் முக்கியம் வாய்ந்த, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடமும், சில மாதங்களாக காலியாகவே உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, ஆசிரியர் தகுதியில் உள்ளவரே பணியேற்க வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர் அல்லாதவரை பொறுப்பளாராக நியமித்துள்ளதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பல்கலையின் துணைவேந்தர் தாண்டவன் கூறுகையில், "சிண்டிகேட்டின் அனுமதி பெற்று, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் நிரப்பப்படும்" என்றார்.
