UPDATED : மார் 20, 2013 12:00 AM
ADDED : மார் 20, 2013 02:37 PM
கரூர்: எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க, வெளியூர் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. இதனால் ராயனூர் பள்ளி தரம் உயர்த்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் ராயனூரில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாய, ஜவுளி கூலித் தொழிலாளராக வேலை செய்கின்றனர். இங்கு பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி செயல்படுகின்றது. இதில், 230 மாணவர்கள், 190 மாணவிகள் என மொத்தம் 420 பேர் படிக்கின்றனர்.
இங்கு எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால், ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள தாந்தோனி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தான் மாணவர்கள் செல்ல வேண்டும். இதனால், ராயனூரில் உயர்நிலைப்பள்ளி படிப்பவர்களில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: எட்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் உயர்நிலைப்பள்ளி படிப்புக்கு தாந்தோனி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பஸ்ஸில் செல்லவேண்டும். இதன் விளைவாக பெண் பிள்ளைகளின் கல்வி மேற்கொண்டு தொடர, பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் படிப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது.
பொதுவாக ஒரு பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம், 60 பேர் படித்தால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 132 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி, பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை.
இதுமட்டுமல்லாது, 420 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில், ஆண்கள், பெண்களுக்கு தனியே ஒரு கழிவறை மட்டும் உள்ளது. நெருக்கடி காரணமாக இவர்கள் வெளி இடங்களை கழிவறையாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பழமையான கட்டிடம் சத்துணவுக் கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரமில்லாமல் உணவுகள் சமைக்கப்பட்டு வழங்கப்படுவதால், மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கட்டாய கல்விச் சட்டம் அமலில் இருக்கும் சூழ்நிலையில், இப்பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
