தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சி துவக்கம்

புதுச்சேரியில் தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சி துவக்கம்

புதுச்சேரியில் தினமலர் "வழிகாட்டி" நிகழ்ச்சி துவக்கம்


UPDATED : மார் 30, 2013 12:00 AM

ADDED : மார் 30, 2013 08:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2013 12:00 AM ADDED : மார் 30, 2013 08:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடித்ததும், அடுத்து என்ன படிப்பைத் தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தந்தக் கல்லூரியில் என்னன்ன படிப்புகள் உள்ளன என ஏராளமான கேள்விகள் எழும். சந்தேகங்களும், குழப்பங்களும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஏற்படும். அத்தகைய சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தினமலர் நாளிதழ், வழிகாட்டி நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்தாண்டிற்கான தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள சுபலட்சுமி மகாலில் இன்று (30ம் தேதி) துவங்கி, வரும் 1ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடக்கிறது.

சென்னை மதுரவயல் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம், தினமலருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குகிறது. தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 47 கல்லூரிகள், முன்னணி கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்கங்களை அமைந்துள்ளன.

தங்களிடம் உள்ள படிப்புகள், கல்லூரியின் தனித்தன்மை, கல்லூரி கட்டணங்கள் குறித்து நேரடியாக கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த ஸ்டால்களை மாணவர்களும், பெற்றோரும் நேரடியாக பார்வையிட்டு, தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வி நிபுணர்கள் பங்கேற்று நேரடியாக விளக்கம் தரும் கருத்தரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கிறது.

இன்று நடக்கும் முதல் கருத்தரங்கத்தில், கனவு படிப்பான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் வழிமுறைகளைப் பற்றி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., விவரிக்கிறார். சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்பின் எதிர்காலங்கள் பற்றி எஸ்.எல்.சி.எஸ்.சின் தினேஷ்குமார் எளிய முறையில் விவரிக்க உள்ளார்.

எதிர்கால உலகை ஆள உள்ள பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள் பற்றி டாக்டர் சுதாகர் விளக்கம் தருகிறார். கடல்சார் அறிவியல் மற்றும் ஆய்வு கல்வியைப் படித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றி கடலிலேயே தன் பாதி வாழ்நாளை கழித்த நரசய்யா ஆழமாக விளக்குகிறார்.

வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்காக கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு, வெளிநாட்டில் மேற்படிப்பிற்கான சாதக பாதங்கள் பற்றி பால் செல்லகுமார் அலசுகிறார். மொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி என்பது பற்றி பேராசிரியர் ஞானசம்பந்தம் நகைச்சுவையுடன் விளக்க காத்திருக்கிறார்.

நாளை (31ம் தேதி) நடக்கும் இரண்டாம் நாள் கருத்தரங்கில், என்ன படிக்கலாம்... எங்குப் படிக்கலாம்... என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி புட்டுபுட்டு வைக்கிறார். ஊடக துறை படிப்புகள் பற்றி எஸ்.எல்.சி.எஸ்.சின் லாரன்ஸ் ஜெயக்குமார் விளக்கம் அளிக்கிறார்.

சுகாதாரம், அறிவியல் இரண்டையும் இணைக்கும் ஹெல்த் சயின்சஸ் படிப்புகள் பற்றி டாக்டர் சங்கரன் விவரிக்கிறார். உலகிற்கு உணவிடும் வேளாண் அறிவியல் பற்றி ராஜராஜன் எடுத்துரைக்கிறார். கால்நடை அறிவியல் கல்வியின் எதிர்காலம் பற்றி டாக்டர் சந்திரஹாசன் கற்று தருகிறார்.

கை நிறைய சம்பாதிக்க வழிச்செய்யும் சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐசிடபிள்யூஏ படிப்புகள் பற்றி சரவண பிரசாத் விவரிக்கிறார்.

மூன்றாம் நாளான ஏப்ரல் 1ம் தேதி நடக்கும் கருத்தரங்கத்தில், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உள்ள மேல்படிப்பு வாய்ப்புகள் பற்றி ரமேஷ் பிரபா விளக்குகிறார். சக்கைப்போடு போடும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய போக்கு பற்றி சுமந்த் ராமன் கூறுகிறார்.

திடீர் முக்கியத்துவம் பெற்றுள்ள நானோடெக், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல், ஆட்டோ மொபைல், மெக்கட்ரானிக்ஸ் பற்றி டாக்டர் அரவிந்தன் விவரிக்கிறார். மேற்படிப்புக்கு வங்கிகளில் இருந்து கல்வி கடன் பெறும் வழிமுறைகள் பற்றி பிறவிபெருமாள் சொல்லுகிறார்.

வேலைவாய்ப்பிற்கு தயாராகும் வழிமுறைகளை சுஜித்குமார் விவரிக்கிறார்.வழிகாட்டி கண்காட்சி, காலை 10 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி இலவசம். கேன்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும், "எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது" என்ற முழு விபரங்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

மாணவ மாணவிகளே... உங்களின் எதிர்கால கனவு மற்றும் உயர் கல்வி தேடலுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக, நடத்தப்படும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க தவறாதீங்க... பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை உள்ள பெற்றோர்களும் அவசியம் பங்கேற்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us