பேருந்து வசதியின்மையால் மானவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி
பேருந்து வசதியின்மையால் மானவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி
UPDATED : ஏப் 08, 2013 12:00 AM
ADDED : ஏப் 08, 2013 10:51 AM
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செப்பாக்கம் கிராமத்திற்கு, போக்குவரத்து வசதி இல்லாததால், அங்குள்ள மாணவியரை, உயர் கல்விக்காக வெளியிடங்களுக்கு அனுப்ப, பெற்றோர் தயங்கி வருகின்றனர். இதனால், உயர் கல்வி பெறுவதில் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செப்பாக்கம் கிராமத்தில் உள்ள 80 குடியிருப்புகளில், 180 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்து மாணவர்கள், 2 கி.மீ., தொலைவில் உள்ள மவுத்தம்பேடு ஆரம்ப பள்ளியில், படிப்பை துவக்குகின்றனர்.
ஆறாம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்றால், 4 கி.மீ., தொலைவில் உள்ள அத்திப்பட்டு செல்ல வேண்டும். உயர் கல்விக்கு, 5 கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி, மீஞ்சூருக்கு செல்ல வேண்டும். ஆனால், செப்பாக்கத்தில் இருந்து, இந்த இடங்களுக்கு, பேருந்து வசதி இல்லை. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள சாலைகளின் மோசமான நிலை.
மாணவர்கள் மிதிவண்டிகளில் சென்று, உயர் கல்வி பெறுகின்றனர். மாணவியரின் நிலை தான் சிக்கலாகி உள்ளது. செப்பாக்கத்தில் இருந்து மீஞ்சூர், அத்திப்பட்டு செல்லும் வழி, ஆள் அரவமற்ற பகுதியாகும்.
இதனால், கல்வி கற்க செல்லும் மாணவியர், மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது, அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடுமோ என, பெற்றோர் அச்சமடைந்து, உயர் கல்வி பெறுவதற்காக, மாணவியரை, வெளியிடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து, செப்பாக்கத்தைச் சேர்ந்த, சித்ரா கூறுகையில், "நான், பிளஸ் 2 முடித்துள்ளேன். போக்குவரத்து வசதி இல்லாததால், பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கல்லூரி படிப்பை தொடங்க முடியவில்லை. பட்ட படிப்பு முடித்து, ஆசிரியர் ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவு முடங்கி போயுள்ளது," என்றார்
தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ள மாணவி சந்திரா கூறுகையில், "நடந்து சென்று, மீஞ்சூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து, தேர்வு எழுதி உள்ளேன். நான் உயர் கல்வி பெற்றால், நல்ல வேலை கிடைத்து, எனது இரு சகோதரிகளை காப்பாற்ற முடியும். ஆனால், படிக்க செல்ல, பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், உயர் கல்வி பெற பெற்றோர் தடை விதித்து உள்ளனர்," என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத, ஒரு மாணவியின் தந்தை கூறுகையில், "என்னுடைய மகள் செங்குன்றத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படிக்கிறாள். அவ்வப்போது, ஊடகங்களில் வெளியாகும் பாலியல் பலாத்கார செய்திகள், எங்களை அதிகமாகவே அச்சப்படுத்தி உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், பெண் குழந்தைகளை, பாதுகாப்பற்ற நிலையில், உயர்கல்வி பயில அனுப்பவதில் தயக்கம் ஏற்படுவது இயற்கை தானே," என்றார்.
போக்குவரத்து, சாலை வசதி, சமூக பாதுகாப்பு இல்லாமல் கிராமப்புற மாணவியரின் கல்வி எதிர்காலம் இருண்டு வருகிறது. மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உரிய சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இது குறித்து, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேற்கண்ட கிராமத்திற்கு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
