UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 10:55 AM
திருநெல்வேலி: நெல்லை பல்கலை., பேராசிரியர் ஜெய்சங்கர் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய அறிவியல் கழகம் மற்றும் எல்ஸ்வேயர்சின் ஸ்கோப்பஸ் இளம் விஞ்ஞானி குழு 2012ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருதுகளை அறிவித்துள்ளது.
விவசாயம், உயிரி அறிவியல், வேதியியல், புவி, கடல்சார் மற்றும் சுற்றுப்புற அறிவியல், பொறியியல், கணிதம், மருத்துவம் இயற்பியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஒன்பது துறைகளை சேர்ந்தவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வு விருதுகள், ஆய்வுகளின் வெளிப்பாடுகள் மற்றும் புதிய கருத்து உருவாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
சமூகவியல் துறை விருதுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., குற்றவியல் மற்றும் குற்றநீதியியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதுக்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் டில்லியில் வரும் ஜூன் மாதம் நடக்கும் விழாவில் பேராசிரியர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட உள்ளது.
இளம் விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியர் ஜெய்சங்கரை, துணைவேந்தர் குமரகுரு, பதிவாளர் (பொறுப்பு) தமிழ்செல்வன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
