பெண்களுக்கு சமநிலை: சிவகாமி ஐ.ஏ.எஸ்., வலியுறுத்தல்
பெண்களுக்கு சமநிலை: சிவகாமி ஐ.ஏ.எஸ்., வலியுறுத்தல்
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “சட்டசபை, பார்லிமென்ட் உட்பட எல்லா இடங்களிலும் பெண்கள் சம நிலையை அடைய வேண்டும்,” என்று ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி வலியுறுத்தி பேசினார்.
என்.வி.எல்., ஸ்மார்ட் கம்ப்யூட்டர் எஜுகேஷன் சார்பில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘முதல்வன்-2008’ விருது வழங்கும் விழா நடந்தது.
கடந்த பொதுத்தேர்வில் 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ருதி மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி உமா மகேஸ்வரிக்கு, ‘முதல்வன்-2008’ விருதையும், ரொக்கப் பரிசையும் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சார்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி வழங்கினார்.
மேலும், அதே பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த நான்கு மாணவிகள் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழையும் அவர் வழங்கினார்.
விழாவில் சிவகாமி பேசியதாவது: மாணவிகள் வெறும் படிப்பை மட்டும் படிக்காமல், அத்துடன் கம்ப்யூட்டர் கல்வியையும் சேர்த்து படிக்க வேண்டும். இதனால், விரைவில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். வருங்காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமான வேலை வாய்ப்புகளை எதிர் பார்க்கலாம். எனவே, கம்ப்யூட்டர் பயிற்சியைப் பெறுவது மிகவும் முக்கியம்.
பள்ளி பொதுத்தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதிக்கின்றனர். ஆனால், ஐ.ஏ.எஸ்., போன்ற தேர்வுகளில் பார்த்தால், பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. 300 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்வு பெற்றால், அதில் வெறும் 40 பேர் மட்டுமே பெண்கள். இவ்வாறு அவர் பேசினார்.
