UPDATED : டிச 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு ஜூனியர் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், தற்போதைய நிலை தொடர வேண்டும் என இடைக்கால உத்தரவிட்டது.
இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார் மனு தாக்கல் செய்தார். ஜூனியர் ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தார்.
இதை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் யானை ராஜேந்திரன் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிமணி, இவ்வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
