UPDATED : ஆக 13, 2014 12:00 AM
ADDED : ஆக 13, 2014 12:04 PM
திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில், மதியமே சமைக்கப்பட்ட உணவை, இரவு உணவாகவும் வழங்கப்பட்டு வருவதை கண்டறிந்த கலெக்டர் ஞானசேகரன், விடுதி காப்பாளரை எச்சரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை யூனியனில், ஆதிதிராவிட நலத்துறை மூலம் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வராததும், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு பொருட்களை கையாடலும் செய்யப்பட்டு வருவதாக, கலெக்டர் ஞானசேகரனுக்கு புகார் வந்தது.
இந்நிலையில், கலெக்டர் ஞானசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன், மாலை 5 மணிக்கு போக்குவரத்து வசதி இல்லாத மேல்குச்சானூர் என்ற கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, மாணவர்களின் கல்வித்தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும், புத்தகத்தை படித்துக்காட்ட திணறியதால், கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், விடுதியில் உணவு சரிவர வழங்கப்படுவது குறித்து, மாணவர்களிடம், கலெக்டர் ஞானசேகரன் விசாரணை மேற்கொண்டபோது, மதியம் சமைக்கப்பட்ட உணவே, இரவும் வழங்கப்படுவதாக, தெரியவந்தது. வருகை பதிவேட்டை, கலெக்டர் ஆய்வு செய்தபோது, 140 மாணவர்களுக்கு, 68 பேர் மட்டுமே வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை ஆசிரியரும், வார்டனுமான பிரபுவிடம், "இதே நிலை நீடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கலெக்டர் ஞானசேகரன் எச்சரித்து சென்றார். கலெக்டர் ஆய்வால், இதர உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
